என் கண்மணிகளுக்கு கண்ணீரஞ்சலி
கூட்டி வந்தேனே
கண்விழித்தவுடனே
சொல்லித்தான் வளர்த்தேனே
வெள்ளையன், ரோஸ், கருப்பன்
செம்பட்டையென்ன்று
காட்டுப் புறாக்கள்
கால் வயித்து கதிருக்கே
காததூரம் பறந்திட
பெத்த தாயி வாசமறியா
குறை தீர்க்க ஊட்டிதான் வளர்த்தேனே
கோதுமையும் பொரிகடலையும்.
சிறகு பளபளக்க வாங்கி வந்தேன்
சேத்த காசில் மீனெண்ணெய்.
சூரியன் எழுமுன்னே கூண்டு
திறந்து நன்னீரும் சாப்பாடும் வைத்தேனே
எல்லாம் சரிதான்! சிறகும் வளர்ந்தது!
அதுவரை தெரியாதது அப்போது தெரிந்தது!
நான் புறா வளர்ப்பது :(
காலையிலே திறந்துவிட்டால்
வீட்ட சுத்தி நாலும் நாப்பது நிமிசம்
வட்டமடித்து இறங்குமே!
வான் பார்த்து தலை சுற்றி போனேனே!
கண நேரம் காணாட்டாலும்
திடுக்கிடும் உள்ளமே!
சின்ன பயபுள்ளக தெரியலியோ
போன வழினு!
அடப்பாவி மக்கா! எச்சிகையாலே காக்கா விரட்டாதவள்
எல்லாம் வண்டி வண்டியாய் கதை சொன்னாளே அம்மாவிடம்!
அக்கோவ்! புறா வளர்த்தால் வீட்டுக்கு நல்லதல்ல!
அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன் என்று!
காலில் ஒட்டிய தூசியாய் விரட்டிவிட்டாளே
கன்னுக்குட்டியிடம் முடிவைவிட்டு!
புறா பறக்கும் அழகைப் பார்த்து பார்த்து
பரிச்சையில விட்டேனே மார்க்க!
பூவா தலையா என்பதல்ல கேள்வி!
கைமேலே ஒரு முடிவு படிச்சு
வேலைக்கு போனப்பறம் புறாப்பக்கம் போகலாம்.
என்ன பண்ண? வானுயரம் பறக்க
வளர்ந்துவிட்ட பட்டாக்கள!
ஆலோசனை பண்ண மனமின்றி
புறாக்கள் பறந்த நேரம்
உடைத்தேனே கூண்டதான்!
சிறகு வலிக்க சுத்தி வந்ததுக
வீட காணாம வெலவெலத்து போனதுக!
விடியலுக்குள் ஓடிபோய்டுங்க!
வளர்த்தவன் சொல்கிறேன் நல்லதுக்கே!
உன் நல்லதுக்கும் என் நல்லதுக்கும்!
கூண்டத்தான் உடைச்சாலும்
நின்னீகளே போக்கிடமும் தெரியாம
இராப் பொழுதும் ஒத்த காலிலே!
விட்ட மார்க்க பிடிக்க
விட்டத படிச்சுட்டு
மச்சேறி வந்தாக்கா
எச்சலனமுமின்றி நின்னீகளே பாவமாய்!
வாயிருந்தா அழக்கூடிய நிலையில் நீங்களும்
வாயிருந்தும் அழ முடியா நிலையில் நானும்
விட்டத பிடிக்க வளர்த்தத விரட்டிவிட்டு!
வளர்ந்த பாசம் விடல புடிச்சு கவுத்து போட்டேன்
புளிக்கூடையை! நகரத்து புலியாம்
பூனையிடம் இருந்து காப்பாற்ற!
சிவனாய் மாறப்போறவன்
விஷ்ணுவாய் காத்தேனே பூனையிடமிருந்தே!
சூரியனை எழுப்பிவிடுபவன்
இன்று கண் திறக்காமல் படுத்திருந்தேனே
தூக்கம் கொள்ளாமல்!
எல்லாம் உன் விதி என்றே கறிக்கடைக்கு
கொண்டு போக மஞ்சப்பைய தேடயில
நெஞ்சில் வந்திறங்கியதே அந்த ஓசை!
கூக்கூ குகுக்கு குக்குகு குகூக்கு குகு!
சின்ன பயலுக பெரிய மனுசனாயிட்டானுக!
விம்மி போனதய்யா என்னெஞ்சம்!
ஒரு புத்தியாய் பைக்குள்ள போட்டு
தம்பிக்கிட்ட கொடுத்து
காசாக்க சொல்லியாச்சு!
முப்பதுக்கு போச்சி வளத்ததுக்கு
லாபம் அஞ்சி என்றே துக்கமுடன் வந்தான்!
லாபத்த பார்த்து மனக்கண்ணீர் விட்டோமே!
வாங்கியவன் வெட்டி காசாக்கிருப்பானே
குனிய வச்சி என்றி புத்தி சொன்னாலும்
ஒரிரு மாதம் எந்த புறாவப் பார்த்தாலும்
இது நம்மளோடதானு கண் பார்த்தபின்பே கால் நகரும்.
படிச்சும் முடிச்சாச்சு!
வேலையும் கிடைச்சாச்சு!!
வெளிநாடும் வந்தாச்சி!
எந்நாடு போனாலும் எவ்விடம் பார்த்தாலும்
இது மாதிரிதான் இருக்குங்க நம் மக்கா என்று
பார்த்தபடியே நகர்கிறேன் புறாக்கூட்டத்தையே!
குழிதோண்டி நான் புதைத்த புறாக்கனவு
முளை விடவும் காத்திருக்கே! - ரமேஷ்